நான் பிறந்ததில் (70களின் நடுவே) இருந்து என் பள்ளி பருவம் முடியும் வரை ரங்கநாதன் தெருவில் தான் (எங்கள் லிப்கோ நிறுவனம் அப்போது அங்கே தான் இருந்தது) வசித்தோம், அதனால் படத்தின் கதைக்களம் எனக்கு நன்றாக தெரிந்த ஒன்று.   அதனால் இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில் இருந்து இதைப் பார்க்க விரும்பினேன். கடந்த பல மாதங்களாகவே நான் மீண்டும் மீண்டும் கேட்டுகும் ஒரு பாட்டு படத்தில் வரும் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” பாட்டு, அதனால் மேலும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு. இன்று தான் ஐநாக்ஸ்’ல் பார்க்க முடிந்தது. வந்து பலவாரங்கள் ஆன படத்திற்கு முக்கால்வாசிக் கூட்டம் இருந்தது வியப்பு – இயக்குனரை அதற்குப் பாராட்டலாம். புதுமுக நாயகன், நாயகி அருமையாக செய்துள்ளார்கள், தங்களின் பாத்திரங்களாகவே நம் கண்ணிலும் மனத்திலும் வந்துப் போகிறார்கள் – அவர்களுக்கு நல்ல எதிர்க்காலம் தெரிகிறது, அவர்கள் இல்லையே படம் தோல்வியடைந்திருக்கும்.

சென்னை ரங்கநாதன் தெருவில் எவ்வளவோ நடக்கிறது, எவ்வளவோ நபர்கள் இங்கே வந்து வாழ்க்கையில் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் (அனைத்தும் நல்லப்படியாக நடக்கிறது என்று நான் சொல்லவேயில்லை) அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இயக்குனர் ஒரு கடையில் நடக்கும் தவறுகளை மட்டும் குறியாக காட்டுகிறாரே என்று நமக்கு படுவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனருக்கு வாழ்க்கையின் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ, அவநம்பிக்கையோ தெரியவில்லை. என்ன தான் கிராமத்தில் (கிராமங்கள் எல்லாம் இப்போது தனியாக ஒதுங்கி ஒன்றும் இல்லை) இருந்து முதல் வேளைக்கு வந்தாலும் எதுவுமே தெரியாமல் யாரும் வருவதில்லை, இன்றைய இளைஞர்கள் வேலைக்கு வரும் போதே அல்லது வந்து சில நாட்களிலேயே  அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்களை ஒரளவுக்கு நல்ல முறையில் கடைக்காரர்கள் நடத்தி, நல்ல சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வேலைவிட்டு வேறு வேலைக்குப் போய் கொண்டே இருப்பார்கள், அது தான் எதார்த்தம், உண்மையும் கூட. இதை எல்லாம் விட்டு இயக்குனர் ஏனோ எம்.ஜி.ஆரின் ”ஆயிரத்தில் ஒருவன்” காலத்து அடிமைகள் போல மிகைப்படுத்தி காட்டியுள்ளதை மனம் ஏற்க மறுக்கிறது. ஏனோ இயக்குனரின் பார்வையில், கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் (நாயகன், நாயகி அவர்களின் நண்பர்கள் இருவரைத் தவிர்த்து) கெட்டவர்களகவே இருக்கிறார்கள் – அது அண்ணாச்சி ஆகட்டும், மேல்பார்வையாளராகட்டும், உடன் வேலை செய்யும் பெண்ணை காதலிக்கும் நபராகட்டும், தெருவில் இருக்கும் ஆட்டோகாரர்களாட்டும், தங்கச்சியை வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் மாமியாகட்டும். நாயகன், நாயகி இவர்களுக்காகவே பார்த்து பார்த்து தேடி தேடி கெட்டவர்கள் மட்டுமே அதிகமாக வருகிறார்கள், விதியும் விளையாடிக் கொண்டே இருக்கிறது, புரியவில்லை. முடிவிலும் ஏனோ ஒரு பெரிய இழப்பு, இயக்குனர் சோகமாக மட்டுமே இருக்க வேண்டும் அப்போது தான் படம் வெற்றி பெரும் என்று கங்கணம் கட்டி கொண்டு எடுத்ததுப் போல் தோன்றுகிறது.  Over Dramatizationஐ முழுவதுமாக தவிர்த்திருந்தால் இந்தியா அளவில் ஒரிரு விருதுகள் படத்திற்கு கிடைத்திருக்கும்.

கடையில் வேலை செய்பவர்களை மோசமாக நடத்தப்படுவதையும், அரசாங்கத்தை ஏமாற்றுவதைப் பற்றியும் இவ்வளவு கீழ்தரமாக கடையின் உறுமையாளரான அண்ணாச்சியை சித்தரிக்கும் ஒரு படத்தை முழுவதும் எப்படி அவர்கள் கடையில் எடுக்கவிட்டார்கள் “சரவணா ஸ்டோர்ஸ்” மற்றும் ”சௌந்தரப்பாண்டியன் ஸ்டோர்ஸ்”  என்பது தான் எனக்கு ஆச்சர்யம்!

Angadi Theru (2010) - அங்காடித் தெரு (2010)

Angadi Theru (2010) – அங்காடித் தெரு (2010)

Tagged in:

, , ,