செல்வராகவன் (Selvaraghavan) இயக்கத்தில் படப்பிடிப்பிலேயே பல காலம் பேசப்பட்ட படம் இது – ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan). கார்தி (Karthi), ரீமா சென் (Reemma Sen), ஆண்ட்ரியா (Andrea Jeremiah), பார்த்திபன் (R. Parthiepan aka R Parthiban) ஆகியோர் நடித்துள்ளார்கள். சரித்திரமும் நவீனயுகமும் சேர்ந்த கலவை என்பதால் நடிப்பது கடினம், ஆனால் அனைவரும் பாத்திரம் அறிந்து அருமையாக செய்துள்ளார்கள். கவர்ச்சியாகவும், தைரியமாகவும், அந்தக்கால இளவரசி போலவும், கத்தி சண்டை, துப்பாக்கிப் சுடுதல் என்று படம் முழுவதும் வந்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் ரீமா சென் – அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவருக்கு ஒரு அருமையான வாய்ப்பு இந்த படம், அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் படத்தின் நாயகன் அவர் தான். கார்தி பாத்திரம் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார், இயக்குனர் இன்னும் கொஞ்சம் அடக்கியிருந்தால் கதைக்கு மேலும் வலுக்கூட்டியிருக்கும்.

செல்வராகவன் மற்றும் அவரின் குழுவின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும், விவரத்திலும்  நன்றாக உணர முடிகிறது.  தமிழில் கடைசியாக இப்படியான ஒரு படம் (சரித்திரத்தையும் கற்பனையும் கலந்து) எப்போது வந்தது என்று எனக்கு நினைவு இல்லை. Computer Graphicsஐ நன்றாக பயன்படுத்தியுள்ளர்கள், இதற்கு மேல் சிறப்பாக செய்ய ஹாலிவுட் அளவு பணம் தேவை, அதனால் இது போதும்.

படத்தின் குறைகள் என்று பார்த்தால்  ரொம்ப இழுத்துவிட்டார்கள், இரண்டு படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு. இடைவேளைக்கும் அடுத்த பகுதிக்கும் துளிக் கூட ஒட்டாதது கதையின் பலவீனம். செல்வராகவன் தான் பார்த்த மூன்று, நான்கு ஆங்கிலப் படங்களை (Gladiator, Return of Mummies) ஒரே தமிழ் படத்தில் காட்ட முயற்சி செய்துள்ளதுப் போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை – என்னை பொருத்தவரை இது தான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். இதை தவிர்த்திருந்தால் பலக்காலம் பேசப்படும் படமாக இது அமைந்திருக்கும்.

எனக்கு படத்தின் கதை பெருமளவு புரிந்தது என்று நினைக்கிறேன்,  என் மனைவிக்கு சுத்தமாகப் புரியவில்லை (எங்கள் இருவருக்கும் இதனால் படம் முடிந்தவுடம் வாக்குவாதம்),  தமிழ் ரசிகர்களுக்காக இதில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் வசூலை அதிகரித்திருக்கும்.

Aayirathil Oruvan (2010)

Aayirathil Oruvan (2010)

ஆயிரத்தில் ஒருவன் – பார்க்கலாம், ஆனால் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் ஏன் தன் படத்தின் தலைப்பை இதற்கு வைத்தார்கள் என்று சிறிது வருந்திருப்பார்.

Categorized in:

Tagged in:

, , ,