சேப்பியன் ஜீனோ — புதிய காணொலி: செயற்கை நுண்ணறிவின் இரண்டு முகங்கள்
செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்துக்கு எத்தனை நன்மைகள் செய்யும் என்று நாம் பேசுகிறோம். ஆனால், அதே தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஆபத்தானதாகவும் மாறலாம் என்பதை இந்த முறை நண்பர் ஷானோடு விரிவாகப் பேசியிருக்கிறேன்.
இந்தக் காணொலியில் நாங்கள் இரண்டு முக்கியமான செய்திகளை மையப்படுத்திப் பேசியிருக்கிறோம்.
மெக்சிகோ தரவுத் திருட்டு
மெக்சிகோ நாட்டின் அரசாங்க வழங்ககங்களில் (Servers) இருந்து சுமார் 19 கோடி மக்களின் தனிப்பட்ட விவரங்கள் — முகவரி, வங்கி விவரங்கள், கைப்பேசி எண், புகைப்படம் என எல்லாமே — திருடப்பட்டன. இதைச் செய்தது பெரிய ஊடுருவர் (Hacker) குழுவோ, நிபுணரோ அல்ல. கிளாடு கோட் (Claude Code) எனும் செயற்கை நுண்ணறிக் கருவியை வளைத்துப் பயன்படுத்தி, “நான் ஒரு பாதுகாப்பு ஆய்வாளர்” என்று சொல்லி, அரசு வலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைத் தானியங்கியாகக் கண்டுபிடித்து அதைச் சுரண்டினர். ஒரு சாதாரண மனிதன் செயற்கை நுண்ணறிவு உதவியோடு இப்படி ஒரு பெரும் குற்றத்தை இழைக்க முடியும் என்பதுதான் மிகவும் கவலைப்படவைக்கும் செய்தி.
உயிர் ரசாயன ஆயுத அச்சுறுத்தல்
இரண்டாவது செய்தி இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. செயற்கை நுண்ணறிச் செயலிகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நபரின் டி.என்.ஏ.வை (DNA) மட்டும் குறிவைத்து, அவருக்கு மட்டுமே நஞ்சாக வேலை செய்யும் நச்சுப் புரதங்களைத் (toxic proteins) தயாரிக்க முடியுமா என்று கேட்டுப் பரிசோதித்திருக்கின்றனர். ரெசின் போன்ற இயற்கையான பொருட்களைச் சற்று மாற்றி, அது ரெசினென்று கண்டுபிடிக்கவே முடியாதபடி, ஆனால் அதே நஞ்சின் அளவுக்கே ஆபத்தானதாக மாற்ற முடியுமா என்று செயற்கை நுண்ணறிவிடம் கேட்கப்பட்டது. இது முன்பு சாத்தியமில்லை என்றில்லை, ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு காரணமாக மிக எளிதாகிவிட்டது என்பதே மிகப்பெரிய கவலை.
நாம் என்ன செய்யலாம்?
இந்தத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கிறது. அரசாங்கங்களும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் பாதுகாப்பு அரண்கள் அமைக்க முயற்சிக்கின்றன. ஆனால், நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கும் இந்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், நமது தனிப்பட்ட தரவுகளை எச்சரிக்கையோடு கையாள்வதும் இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகளைப் பேசும்போது, அதன் தீமைகளையும் பேசுவது நம் கடமை என்று நம்புகிறேன். அதனால்தான் இந்தக் காணொலி.
இதைப் பற்றி இந்தச் ‘சேப்பியன் ஜீனோ’ காணொலியில் நானும் நண்பர் ஷானும் பேசியிருக்கிறோம். யு-ட்யூப்பில் கண்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

