எனக்கான சிறப்பு தீவிரத் திருத்தப் படிவத்தை இணையம் வழியாகச் சமர்ப்பித்து விட்டேன். மிகக் கடினம் என நினைத்த விசயம் எளிதாக முடிந்தது எனக்கே ஆச்சரியம். தேவையாக இருந்தது கொஞ்சம் பொறுமை, அதோடு புரிந்து கொள்ளச் சில நிமிடங்களும் ஆர்வமும். எல்லோருக்கும் இவை முடியும் என்று சொல்லவில்லை. எனது அனுபவத்தை மட்டும் இங்கே பகிர்கிறேன். படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில். நன்றி.
பொறுப்புத் துறப்பு: இந்தத் திருத்தம் வேண்டுமா, தேவையா, இல்லையா? இதில் இருக்கும் அரசியல், போன்றவற்றை விவாதிக்க அரசியல் வல்லுநர்களின் பதிவுகளைப் படிக்கவும். நான் இங்கு அதைப் பற்றிப் பேசவில்லை.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) என்றதைக் கேட்டவுடன் இது என்னடா புதுப் பூதம். தேவையில்லாமல் நமது நேரத்தை அரசாங்கம் வீணடிக்கும் வேலை என்று நினைத்து ஒதுக்கிவிட்டேன். அதோடு கடந்த சில வாரங்களாகக் குடும்பத்தில் கல்யாணம் மற்ற நிகழ்ச்சிகளும், எனது எழுத்துப் பணிகளும் என்னைப் பரபரப்பாக வைத்திருந்தது, இதில் நேரம் செலுத்த முடியவில்லை.
திருத்தப் பணிகள் தொடங்கி இரண்டு வாரங்களாகியும் என் வீட்டுக்கு ‘கணக்கீட்டுப் படிவம்’ வரவேயில்லை. இணையம் வழியாகச் செய்யலாம் என்று எண்ணி, முயன்றேன், எதுவுமே புரியவில்லை. நான் எப்போதும் வாக்களிக்கும் பள்ளியைத் தேர்வு செய்து தேடினேன், எதுவும் வரவில்லை. வழக்கமாக வரும் எங்கள் சாவடிக்கான அலுவலரைத் தொடர்பு கொண்டேன், எனக்குப் பதிலாக உங்கள் தெருவிற்கு வேறு ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் எனச் சொன்னார். சில நாட்கள் கழித்து அந்த புது அலுவலரின் எண்ணைக் கொடுத்தார். அந்த அலுவலரோடு பேசினேன், நிறையப் படிவங்கள் தங்கிவிட்டது, நான் உங்கள் வீட்டுக்கு வந்து தர இயலாது என்றார். நீங்கள் வாக்களிக்கும் பள்ளியில் தான் தினமும் அமர்ந்திருப்பேன் என்றார். நேராக அங்கே போய் அவரைப் பார்த்து குடும்பத்தில் எங்கள் நால்வரின் படிவங்களை வாங்கி வந்தேன்.
படிவமாகப் பார்த்தவுடன் இது அவ்வளவு கடினமாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. புரிந்து கொள்வோமே என்று எண்ணி கிழக்கு நியுஸ் யு-ட்யூப் ஓடையில் பொறியாளர் பாலாஜி மூர்த்தி எளிதாக விளக்கியிருந்த வீடியோவைப் பார்த்தேன். ஓரளவு புரிந்த மாதிரி இருந்தது. கையால் எங்கள் நால்வரின் படிவங்களை எல்லாவற்றையும் எழுதுவது சோம்பேறித்தனமாக இருந்தது, அதோடு மீண்டும் பள்ளிக்குப் போய் கொடுக்க வேண்டும். சரி இணையத்தில் முயலலாம் என்று தொடங்கினேன்.
1) முதலில் உள்ளிட வேண்டியது நமது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண். அடுத்தது நமது செல்பேசி எண். எனக்குச் செல்பேசி எண் இணைக்கப்படவில்லை என்று சொல்லி, அதுவே படிவம்-8 (Form8) என்ற பக்கத்திற்கு அனுப்பியது, அங்கே மாற்றம் என்று சொல்லி, எனது எண்ணை நிரப்பி, ஓடிபி எண்களைச் சில முறைக் கொடுத்தேன். அடுத்த நாள் முயன்ற போது எனது செல்பேசி எண் இணைக்கப்பட்டிருந்தது.
2) இப்போது மீண்டும் செல்பேசி எண்ணைக் கொடுத்து ஓடிபி சரிபார்ப்புக்குப் பிறகு அடுத்த கட்டம். எனக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்ததால் என் விவரங்கள் அதுவாகவே வந்தது. அவற்றைச் சரி பார்த்தேன்.
3) அடுத்தது “My name exists in Electoral Roll of last SIR”, அதாவது முந்தைய திருத்தத்தின் இருக்கும் உங்கள் விவரங்கள் என்ற பகுதியில் SIR 2005 (சென்னைக்கும் மற்ற பெரு நகரங்களுக்கும் 2005ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் மற்ற இடங்களுக்கு 2002ஆம் ஆண்டு) என்று தேர்வு செய்யவேண்டும். இந்த விவரத்தைப் புரிந்து கொள்ள பாலாஜியின் காணொலி உதவியது. இதைப் புரிந்து கொள்ளாமல் உங்களால் முந்தைய விவரங்கள் கண்டு கொள்ள முடியாது.
4) அடுத்து, SIR 2005 ஆம் ஆண்டு பட்டியலில் உங்களின் பாகம் எண் (இது சாவடி எண்ணாகவோ அதற்கு அருகிலோ இருக்கும் எனத் தோன்றுகிறது) மற்றும் வரிசை எண் உள்ளிட வேண்டும். இது தான் இந்தப் படிவத்தின் இருக்கும் முக்கிய படி. உங்களுக்கான பாகம் எண் ஏற்கனவே தெரிந்திருந்தால், அதாவது முன்னர் ஓட்டுப் போட்ட போது இதைக் கவனித்து நினைவில் வைத்திருந்தால் மிகச் சுலபமாக இந்தப் படியை முடித்து விடலாம். இல்லையென்றால் பாகம் எண்ணைத் தெரிந்து கொள்ளக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
இவற்றைக் கண்டுபிடிப்பது ஒரு நுணுக்கம். கொஞ்சம் பொறுமையாக முயன்றால் கிடைத்துவிடும். “elections tn gov in/ElectoralRolls aspx” (dots replaced with space in this post for convenience) என்ற பக்கத்தில் இருக்கும் “Special Intensive Revision 2005 – Electoral Roll Search” தேடுதல் வசதியைக் கொண்டு எனது பெயரையும் இப்போது இருக்கும் சாவடி எண்ணையும் (அதாவது இப்போது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் தலைப்பகுதியில் இருப்பதை) பயன்படுத்தித் தேடினால் எதுவுமே வரவில்லை. பின்னர் தான் புரிந்தது, SIR 2005 கோப்பில் இருக்கும் பாகம் எண் வேறு இப்போது வேறு என்று.
பின்னர், அதே பக்கத்தில் இருக்கும் “Special Intensive Revision 2005” என்று தேர்வு செய்து, அதில் என் அம்மாவின் பெயரைத் தேடினேன், கிடைத்தது. அதில் எங்களுக்கான பாகம் எண்ணைக் கண்டு கொண்டேன். அவ்வளவு தான். அதைக் கொண்டு எனது பெயர் இருக்கும் பாகத்திற்கான SIR 2005 வாக்காளர் பட்டியலை (PDF) தரவிறக்கம் செய்து கொண்டேன். அந்தக் கோப்பில் எனது அம்மாவின் பெயர் இருக்கும் வரியில் அவருக்கான வரிசை எண் கிடைத்தது, அடுத்த வரியில் எனது வரிசை எண் கிடைத்தது. இவற்றைத் தொடங்கிய படிவத்தில் உள்ளிட்டேன். அதுவே 2005ஆம் ஆண்டு பட்டியலில் இருக்கும் என்னுடைய விவரங்களைக் காட்டியது, அது சரியாக இருக்கிறதா என உறுதி செய்து கொண்டு ஆம் என்று சொன்னேன்.
5) அடுத்து எனது தந்தை, தாயார், மனைவியின் வாக்காளர் அடையாள் அட்டை எண்களை உள்ளிட்டேன். அதுவாகவே அவர்களின் பெயர்களைக் கொண்டுவந்து காட்டியது, அதில் திருத்தம் எதுவும் செய்ய முடியாது, தேவையும் இல்லை.
6) அடுத்து எல்லாம் சரியாக இருக்கிறது என மீண்டும் உறுதிப்படுத்தினேன். ஆதார் சரிபார்ப்பு பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே ஆதார் எண், அதற்கான ஓடிபியைக் கொடுத்தேன். இதைத் தொடர்ந்து படத்தில் இருக்கும் “ஒப்புகைச் சீட்டு” (Acknowledgement) வந்தது, அதைச் சேமித்து வைத்துக் கொண்டேன். அவ்வளவே.

வாக்காளர் இளைஞராக இருந்தால்:
எனது மகனுக்கு 2005 ஆம் ஆண்டில் ஓட்டளிக்கும் வயதில்லை, அதனால் அவன் அந்தத் திருத்தப் பட்டியலில் இருக்க மாட்டான். அவனது படிவத்தை உள்ளீடும் போது, முன்னர் பார்த்த #3 படியில் “My parents name exists in the electoral roll of last SIR” என்று தேர்வு செய்ய வேண்டும். அங்கே தந்தையான எனது பெயரையும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் கொடுக்க வேண்டும். மற்றபடி அதே முறை தான்.
உதவியாக இருக்கும் முன்னேற்பாடுகள்:
இதற்கெல்லாம் முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது: முதலில் உங்களின் ஆதார் அட்டை, தற்போது இருக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC), மற்றும் நமது பெற்றோரின் வாக்காளர் அட்டைகள், துணைவரின் வாக்காளர் அட்டை இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். செல்பேசி முக்கியம், இதைப் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். உங்கள் வாக்காளர் பெயர் இருக்கும் பட்டியலுக்கான பாகம் எண், வரிசை எண் இவற்றைக் கண்டுபிடித்து வைத்துக் கொள்ளவும். இதைச் செய்யும் முறைகளை மேலே #4 இல் சொல்லி இருக்கிறேன்.
குறிப்பு:
உங்கள் விவரங்கள் கையில் இருந்தால் ஓரிரு எண்களை, பிறந்த தேதியை மட்டுமே நாம் உள்ளிட வேண்டி இருக்கிறது. பெயர்களையோ, முகவரியோ உள்ளிட வேண்டிய அவசியம் பெரும்பாலானவர்களுக்கு இருக்காது என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் இணையத்தளத்தில் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஒப்பளிப்பதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். அதுவும் பெற்றோர்/மனைவி பெயர்களை, ஆதார் விவரங்களை, அதுவாகவே கொண்டுவருவது உதவியாக இருந்தது.
ஆனால் முந்தைய பாகம் எண், வரிசை எண் என்ன என்பதைக் கண்டுபிடிக்கும் பக்கங்கள் போன நூற்றாண்டு இணைய இடைமுகம். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி, செய்யறிவு தெளித்திருந்தால் பேருதவியாக இருந்திருக்கும்.
இந்தத் திருத்தப் பணியைச் செயல்படுத்தும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அரசு இயந்திரத்தில் சம்பாதிக்க முடியாத, கீழ்த்தட்டில் இருக்கும் இவர்களே இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்றால் மிகையாகாது. ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் பணிகளோடு இதையும் செய்பவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பிழைகள்:
Voters Service Portal (voters eci gov in) மற்றும் Tamil Nadu Voters Service Portal (erolls tn gov in) இரண்டிலும் பிழைகள் இருக்கிறது. முன்னது பரவாயில்லை, ஆனால் பின்னது மோசம் – 2025 ஆம் ஆண்டு தொழில்நுட்பத்திற்கு இந்தப் பக்கம் வந்தால் நல்லது.
எனது படிவத்தைச் சமர்ப்பித்த போது எனது சமீபத்திய படத்தை உள்ளிட முடிந்தது. எனது மனைவிக்கும் மகனுக்கும் செய்த போது எந்தப் படத்தைக் கொடுத்தாலும் “Session Expired” என்ற பிரச்சனை வந்தது. அதனால் அவர்களின் புதிய படங்களைக் கொடுக்கவில்லை. படம் அளிப்பது விருப்பத் தேர்வு என்பதால் அவசியம் இல்லை.
நமது முந்தைய விவரங்களைத் தேடும் பக்கம் அவ்வப்பொழுது வேலை செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து முயன்ற போது விடைவந்தது. பொறுமை அவசியம். அரசு இணையத்தளங்களை வடிவமைக்கும் பொறியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் நம்மை தேட வைப்பது கைவந்த கலை போல. அவர்களின் வேலையை எளிதாக்கிக் கொள்வார்கள். மற்ற அரசு அலுவலர்களின், குடிமக்களின் வேலையைக் குறைப்பது அவர்களின் நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை என்பது இந்த தேடுதல் பக்கத்தின் வடிவமைப்பிலிருந்து தெரிந்தது. (ஏன் அரசாங்க இணையத்தளங்கள் மோசமாக இருக்கிறது என்பதை விளக்கி எனது ‘நுட்பம்’ நூலில் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கிறேன், விருப்பமிருப்பின் அமேசானில் புத்தகத்தை வாங்கி அதைப் படிக்கலாம்.)
நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

Sir, we were able to do. Do you think, it’s easier the same way to search for common citizens, to get their information of 20 years old? How many of us, could recall the booth, were we had voted. In urban areas it is very difficult with most migrating frequently. ECI could have started this task at least a year back.
You are right. This will not be easy for many citizens. I am told that BLOs usually help voters with these details offline, and I hope that is true. I do not have first hand experience to confirm it.
My comment on the government website design was a general observation. I know there are many sincere officers and engineers in NIC and in Tamil Nadu government departments, and I have great respect for their work.