சில வாரங்களுக்கு முன்னர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை, குறிப்பாக அதன் நடுவில் இடம்பெற்றிருந்த புகைப்படம் என் கவனத்தை ஈர்த்தது.
இந்தக் கட்டுரை, இந்திய அரசின் விமானத் துறையின் வழிகாட்டுதலில் இயங்கும் டிஜி-யாத்ரா (Digi Yatra) செயலியைத் தயாரித்த குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பத்தைப் பற்றியது. கட்டுரையுடன் வந்த புகைப்படத்தில், இரு பெண்கள் நடுவில் அமர்ந்திருக்க, அந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர், முதன்மை நிதி அதிகாரி மற்றும் பலர் அவர்களைச் சுற்றி பின்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
பொதுவாக, சூட் அணிந்த ஆண்கள் நடுவில் கால் மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருக்க, மேல்நிலைப் பதவியில் இருந்தாலும் பெண்கள் பின்னால் நின்று கொண்டிருக்கும் காட்சிகளே நாம் பழக்கமாகக் காண்பது. ஆனால் இந்தப் படத்தில், நடுவில் அமர்ந்திருந்த இரு பெண்களில் ஒருவர் ஆலோசகர் (Consultant) மற்றும் மற்றொருவர் நிர்வாக உதவியாளர் (Executive Assistant) ஆவார். இத்தகைய ஒரு காட்சியைத் தனியார் நிறுவனங்களில் காண்பதே அரிது; அதுவும் அரசுத் துறையில் இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

இது பெரிய விஷயமா? நிர்வாகப் பதவிகளில் பெண்கள் இருப்பதாகத் தெரியவில்லையே, அதுதானே முக்கியம் என்றால், ஆம், நீங்கள் நினைப்பது சரி. இந்தியாவில் பெண்கள் உயர்ந்த பதவிகளுக்குக் கடினமான முயற்சிக்குப் பிறகே வருகிறார்கள். அப்போது மரியாதையும் தானாக வருகிறது. ஆனால், அதே பெண்கள் அலுவலகப் பதவிகளில் இருந்தால், ஆண்களுக்குக் கிடைக்கும் அளவுக்கு அங்கீகாரம் கிடைப்பது அரிது. அந்தக் கண்ணோட்டத்தில் நான் இந்தப் படத்தை வித்தியாசமாகப் பார்க்கிறேன்.
இதிலிருந்து தொழில் முனைவோர்கள், குறிப்பாக துளிர்த்தொழில்களை நடத்துபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கும் அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். குறிப்பாக மென்பொருள் துறையில், ஆண்களைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே பெண்கள் உள்ளனர்; அதுவும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பதவிகளில் இவர்கள் இருப்பது மிகவும் குறைவு. அலுவலகத்தில் எடுக்கப்படும் இத்தகைய படங்களில் தொடங்கி, எல்லா நிலைகளிலும் எல்லோரும் கவனிக்கப்படுவதை உணர்த்துவது மிக மிக அவசியம்.
இத்தகைய ஒரு படத்தை எடுத்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளருக்கும், டிஜி-யாத்ரா நிர்வாகத்திற்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
அடிக்குறிப்பு: இதற்கெல்லாம் முன்னோடி பாரதியார் மனைவி செல்லம்மாளையும் மகள் சகுந்தலாவையும் உட்கார வைத்து அவரும் நண்பர்களும் நின்றிருக்கும் படம் என்று தோன்றுகிறது.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

