
Sri Lakshmi Narayana Varadaraja, Poygaipakkam temple
ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜப் பெருமாள் கோயில், பொய்கைப்பாக்கம், விழுப்புரம் 605 103. இது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கசாவடியில் இருந்து பண்ருட்டி போகும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் (விழுப்புரத்திலிருந்து ஏழு கிலோமீட்டர்) தொலைவில் இருக்கிறது.
Location of the temple in Google Maps Website of Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil, Poyyapakkam, Tamil Nadu

எனது தாத்தா (லிப்கோ) திரு. கிருஷ்ணஸ்வாமி சர்மா (LIFCO Sri Krishnaswamy Sarma alias Sarmaji) அவர்களின் சொந்த ஊர் பொய்யப்பாக்கம் என்கிற பொய்கைப்பாக்கம், விழுப்புரத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
அங்கே இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜ பெருமாள் திருக்கோயில் மிகவும் பழமையானது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே இருக்கிறது, சோழர்கள், விஜயநகர மன்னர்களால் ஆதரிக்கப்பட்டது. இது பெண்ணை ஆற்றின் நதிக்கரையிலிருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

கருவறையில் இரண்டு மூலவர்கள் – ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள், இருவர் அருள் தருகிறார்கள். இத்திருத்தலத்தில் ஸ்ரீ லக்ஷ்மீ தேவியும், ஸ்ரீ சரஸ்வதி தேவியும், தங்களின் பாப விமோசனத்திற்காகத் தவமிருந்து அருள் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவர்களோடு ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவர் உற்சவர் வடிவில் இருக்கிறார்.

இத்திருக்கோயிலுக்கு 19 ஆகஸ்ட 2018 அன்று நாங்கள் சென்றது, பெருமாளுக்கு நடக்கின்றத் திருமஞ்சனம் மற்றும் அன்னப்பாவாடை உற்சவத்தில் கலந்து கொண்டு, ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணப் பெருமாளின் திருவருளைப் பெற.


இத்திருத்தலத்தின் மங்களாஸாஸனம்
கார்வானும் சோலை மலை புல்லாணி மையம்
சீர்வானவர் பரவித்தொழம் காணார்கள் சூழ்ந்த
பொய்கைப் பாக்கம் திகழ் மலரான்
மணவாளன் சரணமடைந்தேனே!

விழுப்புரம் அருகில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு:
விழுப்புரம் அருகில் உள்ள பொய்யப்பாக்கம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ இலட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலைப் புனரமைக்கும் திருப்பணியில் ஈடுப்பட்டப் போது சோழர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளதைக் கண்டறிந்தனர்.
இக்கோவிலின் வலப்பக்க நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு பல்லவர் கால எழுத்தமைப்பில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
இக்கோவிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டுக்களில் இராஜேந்திரன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்கள், குறிப்பிடத்தக்கவை. தற்போதைய பொய்யப்பாக்கம் பொய்கைப் பாக்கம் என வழங்கப்படுகிறது.
கருவறையில் உள்ள வரதராஜ பெருமாள் பல்லவர் காலக்கட்டத்தைச் சார்ந்ததாக உள்ளது. இக்கோயில் பல்லவர் காலத்தில் செங்கற் தளியாக இருந்து சோழர் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வுகளை கல்வெட்டாய்வாளர் சு.இராஜவேல் மேற்கொண்டுள்ளார்.

இத்திருத்தலத்தில் எழுந்தருளி மங்களாஸாஸனம் செய்வித்த யதிசேஷ்டர்கள்:
- ஸ்ரீமத் தேர் எழந்தார் ஆண்டவன் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவன் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் தில்லை ஸ்தான ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் தேன்கனிக்கோட்டை ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் கோழியாலம் ஸ்வாமிகள்
- ஸ்ரீமத் கருடபுர ஸ்வாமிகள்
- ஸ்ரீ ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்வாமிகள் (ஸ்ரீ முஷ்ணம்)
சென்னைக்கு அருகில் இருக்கும் இத்திருக்கோயிலுக்கு ஒரு நாள் சென்று வாருங்கள், ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜப் பெருமாளின் திருவருள் நிச்சயம் கிட்டும். திருக்கோயில் நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ள அழைக்கவும்: +91 93810 36170 அல்லது மின்னஞ்சல் செய்ய: sridharanmarch@gmail.com, இணையத் தளம்: poygaipakkamtemple.com.

