
Chennai Sangamam plays near my street corner
சென்னை சங்கமம் தெருவிழா, சென்னை மேற்கு மாம்பலம். ஒளிப்பதிவு: தி.ந.ச.வெங்கட ரங்கன்
இன்று ஞாயிற்றுக்கிழமை (விடுமுறை) என்பதால் நன்றாக மதிய உணவு அருந்திவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமா வேண்டாமா என்று சோம்பேறித்தனமாக இருந்தபோது தெரு முனையிலிருந்து சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததில் இரண்டு பேருந்துகளில் ”சென்னை சங்கமம்” கலைஞர்கள் எங்கள் (சென்னை மேற்கு மாம்பலம்) தெரு முனையில் சென்னை சங்கமம் தெருவிழா நடத்தவிருப்பது தெரிந்தது. அலறி அடித்துக்கொண்டு கேமராக்களும் கையுமாக தெரு முனைக்கு ஓடினேன்.
மதியம் ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணிவரை அருமையான கிராமிய/பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை வீட்டின் அருகையில் இலவசமாகக் கண்டுகளித்தோம். தப்பாட்டம், புலி ஆட்டம், கத்தி வித்தை மற்றும் சில கலைகளை அழகாகவும் சுருக்கமாகவும் செய்து காட்டினார்கள். சென்னை நகரத்திலேயே பிறந்து வளர்ந்த நான் இது போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை இதற்கு முன்பு நேரில் பார்த்ததேயில்லை, சினிமாவில் பார்த்ததோடு சரி. என்னோடு என் மகனும் பார்த்து ரசித்ததைக் கண்டு நான் மகிழ்ந்தேன், என்னைப் போலவே அண்டையயலிலுள்ள மற்ற (அரைக்காற்சட்டை அணிந்த) அப்பாக்களும் தான்.
தெரு முனையில் ஓரிரு நிமிடத்தில் ஏற்பாடு செய்தாலும், ஏற்பாட்டின் எல்லா அம்சத்திலும் நேர்த்தி – பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நல்ல வண்ணமயமான நேர்த்தியான புதிய உடைகள், சரியான வாத்தியங்கள் மற்றும் வந்திருந்த பேருந்திலிருந்த வண்ணமயமான பேனர் என சொல்லிக் கொண்டே போகலாம். அழிந்து வரும் இந்த கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சிகள் நிச்சயம் நல்ல ஒரு ஊக்கம். இதற்காகவே ”சென்னை சங்கமம்” நிறுவனர்களுக்கும் அவர்களுக்குப் பொருளதவி செய்யும் தமிழக அரசையும் மற்றும் விளம்பரதாரர்களையும் பாராட்டவேண்டியது அவசியம். இவைத் தவிர நான் கவனித்த சில நல்ல அம்சங்கள் – மக்களை அழைக்க/கவர ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் விதூடகனை வைத்து சிறுவர்களைக் கவர்ந்தது, காவலர்கள் வராமலிருந்தது, மக்கள் ஒழுங்காகச் சத்தமிடாமல் நின்றது.
இப்போதுள்ள நிலையில் நகரங்களில் இது போல ஒரு நிகழ்ச்சி நடந்தால் தான் தெருவிற்கு வருகிறோம், இல்லை என்றால் நாம் எல்லோரும் கதவையடைத்து வீட்டினுள்ளேயே இருந்துவிடுகிறோம் – அண்டையயலில் யார் இருக்கிறார்கள் என்றோ அவர்கள் முகங்களைப் பார்க்கக்கூட வாய்ப்புகளில்லை. அப்படியே பார்த்தாலும் உதவி கேட்டுவிடுவார்களோன்று பார்த்தும் பார்க்காமல் சென்றுவிடுகிறோம்.
நிகழ்ச்சியில் நான் எடுத்த ஒளிப்பதிவை இங்கேயும், எடுத்த எல்லாத் தெளிவான வண்ணப் படங்களையும் கீழே காணலாம்:







One Comment
சிவா பிள்ளை
மிக்க நன்றி
தூக்கம் போடாமல் இதை எமக்கு எல்லாம் காண்பித்தைமக்கு நன்றிகள் பல,
எனது பழைய கிராமத்து வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டுவந்து விட்டீர்கள். கிராமிய வாழ்கை ஒரு வாழ்க்கைதான்.
இவ்வாறான நிகழ்வுகளால் அக்கம் பக்கத்தவரை நாம் அறிந்து எமக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தலாம்
படங்கள் மித்தெளிவாக உள்ளன.