வல்லரசான அமெரிக்காவில் இந்த மாதிரியும் நடக்கும் என்பதை நம்ப முடியவில்லை. அந்தளவு அங்கே கடைகளில் திருட்டு சாதாரணமாகி விட்டதா அல்லது இது நிறுவனங்களின் அதீதப் பயத்தின் வெளிப்பாடா? அமெரிக்காவின் பிளோரிடா மாநிலத்தில் இருக்கும் காஸ்ட்கோ (Costco) நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இப்படி ஒரு புது அறிவிப்பு வந்திருக்கிறது.
காஸ்ட்கோ என்பது உறுப்பினர்கள் மட்டும் செல்லக்கூடிய அமெரிக்காவின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்கள். இங்கேயிருந்துதான் உங்கள் அமெரிக்க நண்பர் அந்தப் பெரிய சாக்லேட் மற்றும் பாதாம் பருப்புப் பாக்கெட்டைகளையும் வாங்கி வருகிறார்.
பிளோரிடாவில் இருக்கும் அனைத்துக் காஸ்ட்கோ கடைகளிலும் பார்வைக்கு இருக்கும் கணினிகளிலிருந்து நினைவக (RAM) சிப்புகளையும், என்வீடியா ஜிபியுகளையும் கழற்றிப் பாதுகாப்பாக எடுத்து வைத்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு காஸ்ட்கோ கடையிலும் சில கணினிகளே பார்வையில் இருக்கும்; மற்றவற்றை ஏணி வைத்து ஏறி எடுக்க வேண்டும். இதெல்லாமே காமிரா கண்காணித்துக் கொண்டிருக்கும். அப்படிப் பாதுகாப்புக் கருதி கழற்றி வைத்தாலும், அமெரிக்கப் பெருநிறுவனங்கள் பொதுவாகப் பயன்படுத்திய இந்தப் பொருள்களை ஏலமெல்லாம் விடமாட்டார்கள்; தூக்கிக் குப்பையில்தான் போடுவார்கள். ஏனென்றால், அதை ஏலம் விடுவதற்கு அவர்களின் தொழிலாளர்களின் கூலி அதிகமாகும் என்பதால்.
முன்பெல்லாம் நினைவக சிப்புகளை யாருமே பொருட்படுத்த மாட்டார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் அவற்றின் விலை குறைந்துகொண்டே வந்தது. ஆனால், செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியினால் தரவு மையங்களில் (Data Centres) இவற்றின் தேவை பல நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. ஆனால், உற்பத்தி அந்தளவு வளரவில்லை; அது சீராகச் சில ஆண்டுகள் ஆகும். அதனால் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் நினைவக சிப்புகளின் விலை மூன்று மடங்கிலிருந்து பத்து மடங்கு கூட அதிகரித்துவிட்டது.
இது போலவே சேமிப்பகங்களின் (SSD) விலையும் அதிகரித்துவிட்டது. செயற்கை நுண்ணறிவின் மூளையான (Brain) என்வீடியா ஜிபியுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – அதில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் நிழல் யுத்தமே நடக்கிறது.
உற்பத்தி பல மடங்கு அதிகரித்தாலும் நினைவக சிப்புகளின் விலை அடுத்த சில ஆண்டுகளுக்குக் குறையும் வாய்ப்பே இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். காரணம், இவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான வகை நினைவக சிப்புகளை மட்டுமே தயாரிக்கின்றன; சாதாரண கணினி, செல்பேசிகளுக்கான வகைகளின் தயாரிப்பைக் குறைத்துவிட்டனவாம். இதன் இன்னொரு முகமாக, இந்த ஆண்டு நீங்கள் வாங்கும் புது மாடல் செல்பேசியில், உங்களின் பழைய செல்பேசியை விடக் குறைவாகவே மெமரி இருக்கும். நடந்து வரும் அமெரிக்க-இரான் பதற்றத்தினால் இவற்றின் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டு, விலைகள் இன்னும் கூடும்.
உங்கள் கணினி அல்லது செல்பேசி பழுதாகிக் கொண்டிருக்கிறது, நீங்கள் புதிதாக வாங்க நினைத்திருந்தால் உடனே வாங்கிவிடுவது சாமர்த்தியம் என்று கணினித்துறை பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பின் குறிப்பு: இன்றைக்கு இந்தியப் பெருநகரங்களில் பெரிய கடைகளில் எனக்குத் தெரிந்து குழுவாகச் செய்யும் கட்டமைக்கப்பட்ட திருட்டுகள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். அதுவும் தென்னிந்தியாவில் மிக மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். சிறு சிறு திருட்டுகளைச் சொல்லவில்லை, அதை விற்பனை நிலையங்களில் தவிர்க்கவே முடியாது. இந்தத் துறையில் இருப்பவர்கள் அல்லது காவல்துறையினர், இங்கேயும் நிறையவே நடக்கிறது என்றால் கருத்தில் சொல்லவும்; தெரிந்து கொள்கிறேன். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

