
Andha Naal (1954)
இன்றைக்கு கே டிவியில் “அந்த நாள்” திரைப்படம் ஒளிபரப்பானது. படமெடுத்து ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் ஆனாலும், இன்றைக்குப் பார்க்கும்போதும் விறுவிறுப்பாகச் சென்றது. முன்பே நான் ஓரிரு முறை இந்தப்படத்தைப் பார்த்திருந்தாலும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை.

அதற்கு முக்கிய காரணம் வீணை எஸ்.பாலசந்தரின் திறமையான இயக்கம் ஒரு காரணம். புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவின் “ராஷோமோன்” படத்தின் முறையால் கவரப்பட்டு அதைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைத் தமிழுக்கு ஏற்றவகையில் செய்த பெருமை இயக்குனர் வீணை பாலச்சந்தரைச் சாரும். படத்தின் கதை என்று பார்த்தால் மிக எளிமையான ஒன்று, படத்தின் ஆரம்பத்தில் நாயகன் கொலைசெய்யப்பட்டு இருப்பான், அதைச் செய்தது யார் என்று துப்புத் துலக்கும் போலீஸ் கதைதான். இந்தப் படம் வெளிவந்த பின் (தமிழிலும்) இதுபோல பல படங்களைப் பார்த்துவிட்டோம், இருந்தாலும் அதற்கெல்லாம் இது முன்னோடி என்பதை மறுக்க முடியாது, அப்படி வந்தப் படங்களில் எல்லாம் இந்தப் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது .
படத்திற்கு மற்றொரு பலம், ஜாவர் சீதாராமனின் கூர்மையான வசனங்களும். குறிப்பாக விடுதலைப் போராட்ட அரசியலில் மாணவர்கள் பங்கு பெற வேண்டுமா வேண்டாமா என்று நாயகன் சிவாஜியும் (Sivaji Ganesan), நாயகி பண்டாரி பாயும் மேடையில் பேசும் வசனங்கள் இன்றைக்கு நடக்கும் அரசியல் போராட்டங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
படத்தைப் பார்க்காதவர்கள், குறிப்பாக சினிமாத்துறையில் இருக்கும் இளைஞர்கள் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கவும். யூடியூபில் இலவசமாக முழுப்படமும் கிடைக்கிறது.


