
Tamizhuku En Ondrai Azhuthavum (2015)
போன வாரமே இந்தப் படம் – “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” (Tamizhuku En Ondrai Azhuthavum) வெளிவந்துவிட்டது, ஆனால் இன்று தான் என்னால் பார்க்க முடிந்தது – இந்த சின்ன வயசில் எனக்கு எவ்வளவு ஏமாற்றம் பார்த்தீங்களா!
கதை என்று பெரியதாக எதுவும் இல்லை, ஆனால் அதையும் சுவராஸ்யமாக சொல்லியுள்ள முதல் பட இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவிற்கு பாராட்டுக்கள். படத்தை குழந்தைகள், பெற்றோருடன் சேர்ந்துப் பார்க்கலாம் – கவர்ச்சி துளிக்கூட இல்லை (சத்தியமா எனக்கு அதில் வருத்தமே இல்லை, ஏன் நம்ப மாட்டேங்குறீங்க), அடிதடி சண்டை இல்லை, எந்தவித ஹிரோயிஸமும் இல்லை, டாஸ்மார்கில் குடித்துவிட்டு நாயகன் பாடும் சோகப்பாட்டு எதுவும் இல்லை, அப்படி இருந்தும் படத்தில் குறையென்று பெரிதாக எதுவும் இல்லை. ரசிக்கும் படி இருந்தது, சிரிக்கவும் சில காட்சிகள் இருக்கிறது, இயக்குனார் நடிகர் மனோபாலா உதவியால்.
“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற தலைப்பைப் பார்த்ததும் இது கால் செண்டர் அல்லது தொலைப்பேசி நிறுவனத்தைப் பற்றிய கதை என்று நினைத்தேன். ஆனால் இது சூரியப்புயல் (Solar Flare) தாக்கத்தால் ஒரு நாள் சென்னையில் செல்பேசிகள் வேலை செய்யாமல் போகும் போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு கற்பனை கதை. மூன்று ஜோடி, நடுவில் கொஞ்சம் விஞ்ஞானம், நிறைய காமெடி, தொட்டுக் கொள்ள ஒரு வெடிகுண்டு மற்றும் ஒரு எண்பது டன் பாறாங்கல், இது தான் திரைக்கதை.
படத்தின் பலம், சரியான நடிகர்கள் தேர்வு. விளையாட்டு தனமான விஞ்ஞானியாக வரும் இளைஞன் பாத்திரத்தில் நகுல் (Nakul), அவருக்கு ஜோடியாக பொறியியல் கல்லூரி மாணவியாக வரும் ஜஸ்வர்யா தத்தா (Aishwarya Dutta) மிக யதார்த்தமாக தோன்றுகிறார், அதுவும் ஜஸ்வர்யா தத்தா தன் காதலைச் சொல்லும் காட்சியில் உணர்ச்சியே இல்லாமல் நகுல் அதற்கு சரி சொல்வது ரசிக்கும்படி இருந்தது. அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh), திருடன் போலீஸ் மற்றும் குக்கூ என்று இவர் காட்டில் மழை, அவற்றைப் போல ஒரே ஹீரோ ரோல் இல்லையென்றாலும் கொடுத்ததை சரியாக செய்துள்ளார். பிளாட்களை (குடியிருப்புகள்) விற்கும் செல்ஸ்மேனாக வரும் தினேஷுக்கு ஜோடி பிந்து மாதவி (Bindu Madhavi). தற்கொலை தடுப்பு மையத்தில் சேவை செய்யும் பிந்து மாதவியை அவர் பணிபுரியும் வங்கியில் தவறுதலாக பார்க்கிறார் தினேஷ், ஒருதலை காதலை விட்டுவிடுகிறேன், அதை செய்ய நான் உங்களை வெறுக்க வேண்டும், அதற்கு நீங்கள் என்னை கண்டப்படி திட்டிவிடுங்கள் என்று கேட்கிறார் தினேஷ். இதற்காக (அதாவது கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கு) பிந்து மாதவி பல நாள் பயிற்சி எடுக்கும் காட்சிகள் வேடிக்கை.
கால்டாக்ஸி ஓட்டுனராக வரும் சதீஷ் (Satish), அவருக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு துணிக்கடை பணிப்பெண்ணாக வருகிறார். ஆசையாக சதீஷ் எது பேசினாலும், இப்படி தான் அவனும் பேசுவான், இப்படி தான் இவன் செய்வான் என்று பல ஆண் நண்பர்கள் பெயராக ஷாலு ஷம்மு சொல்லும் காட்சிகளில் சதீஷின் தவிப்பு நல்ல சிரிப்பு. நகுலின் அம்மா பாத்திரத்தில் வரும் ஊர்வசி, நல்ல இயல்பான (அவரிடம் இதை கேட்கவா வேண்டும்) நடிப்பு, பேத்தி விளையாடி கொண்டியிருக்கும் பொம்மை வண்டியை, மிண்ணனு தொழில்நுட்ப வார்த்தைகளை அசால்டாக கூறி சரி செய்யும் போது அரங்கில் கைத்தட்டல் பறக்கிறது. அதேப் போல் வீட்டுற்க்கு வந்திருக்கும் கல்லூரி தலைமை ஆசிரியாரான மனோபாலாவிற்கு காபி கொடுக்கும் போது கிண்டல் அடிக்கும் போதும் சிரிக்க வைக்கிறார் ஊர்வசி.
ஒரு மிண்ணனு பொறியாளரான நான், தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் படத்தில் பல ஓட்டைகளை சொல்லலாம், மோலோட்டமாக சரியாக தோன்ற இயக்குனர் முயன்றுள்ளது தெளிவு. விஞ்ஞானத்தை பார்க்க விரும்பினால் டிஸ்கவரி தமிழைப் பார்க்க வேண்டும், அதற்கான இடம் காமெடி படம் இல்லை. மொத்ததில் ஒரு வித்தயாசமான முயற்சி, பாராட்டுக்கள்.


