இன்று பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த தந்தை என்னைக் கூப்பிட்டு சொன்ன ஒரு குட்டி (உண்மை) நகைச்சுவை சம்பவம். என் தாத்தா திரு.கிருஷ்ணஸ்வாமி சர்மா (1908-79) அவர்கள் ஒரு அலாதியான புருஷர், இது அவரின் வேடிக்கையான ஒரு நம்பிக்கையைப் பற்றிது.

காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை  தரிசிக்க அடிக்கடி செல்வது என் தாத்தாவின் வழக்கம். அப்படி போன ஒரு முறை  என் தந்தையையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார்.

பெருமாளை சேவித்துவிட்டு சித்ரகுப்தன் கோயில் வாசலில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கியிருக்கிறார், பிறகு என் தந்தையை அழைத்து பின் சிட்டின் கீழேயிருக்கும் பையை எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். பிறகு சித்ரகுப்தன் கோயிலினுள் சென்று தரிசனம் செய்தயுடன் கொண்டு வந்த பையிலிருந்த கவரை எடுத்து என் தந்தையிடம் கொடுத்து உண்டியலில் அல்லது ஸந்நிதியினுள்ளே போட்டுவிடச் சொல்லியிருக்கிறார். என் தந்தையும் அதை செய்துவிட்டு கவரில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார்.

அதன் உள்ளே அழிக்கும் ரப்பர்கள் சில இருக்கிறது” என்றார் தாத்தா. புரியாமல் என் தந்தை விழித்ததைப் பார்த்தவர் தொடர்ந்து “அந்த ரப்பரை வைத்து நமக்குத் தெரியாமல் நாம் செய்த பாவங்களை சித்ரகுப்தன் அழித்துவிடுவார்” என்றார் சிரித்துக் கொண்டே. அத்தோடு இதை விட்டுவிடாமல்  என் தந்தை கேட்டார்: “நம் புண்ணியங்களையும் சேர்த்து அழித்துவிட்டால் என்ன செய்வது?” என்று.

தந்தைக்கு ஏற்ற தனயன்.

Tagged in:

,