இன்று விடுமுறையாதலால் என்ன செய்வது என்று யோசித்து, நானும் பையனும் காலை உணவு முடித்துவிட்டு மாலுக்கு செல்ல கிளம்பினோம். எந்த அங்காடிக்கு (மாலுக்கு) செல்வது?. சிட்டி செண்டர், ஸ்பேன்சர்ஸ், எக்ஸ்பிரஸ் மால் எல்லாம் நிறைய முறை போயாச்சு. எதுவும் வாங்க வேண்டியதில்லை, வேறும் கண்ணாடி வழியாகப் பார்த்து வர தான் போக வேண்டும். மிக தீவிரமாக யோசித்து, வடபழனியில் இருக்கும் ஃபாரம் விஜயா அங்காடி (Forum Vijaya Mall) போனோம். என் வீட்டிலிருந்து இந்த மால் இரண்டு/இரண்டரை கிலோ மீட்டர் தான்.
காலை பத்து மணி என்பதால் எங்கள் காரையும் சேர்த்து வெறும் பத்து கார் தான், முழு கார் பார்கிங்கும் காலி!!!. என்னமோ தெரியவில்லை, எப்போதும் கூட்டம் அலைமோதும் இடமாக பார்த்து பழகிய அங்காடிகளை வெறிச்சோடிப் பார்க்கும் போது வினோதமாக தான் இருக்கிறது. ஒரு வகையில் நன்றாகவும் இருக்கிறது.
மாலின் முற்றம் வெளிச்சமாக இருக்கிறது, சூர்ய வெளிச்சதை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு இந்த மாலில் சத்தியம் சினிமாஸ், சென்னையின் முதல் “ஐமேக்ஸ்” (IMAX) திரையரங்கை திறக்கிறார்கள். அதன் பின் என்னை இங்கே அடிக்கடிப் பார்க்கலாம்!
நான்கு மாடிகளையும் சுற்றிவிட்டு, சாப்பாடு கடைகள் (Food Court) இடத்திற்கு சென்றோம். காலை உணவு முடித்துவிட்டதால், மேலே எதுவும் சாப்பிட முடியாது (கடைகளிலும் உணவு தயாராகி இருக்கவில்லை), அந்த வருத்ததோடு, செல்பேசியில் வண்ண மேஜைகளையும், வெள்ளை நாற்காலிகளையும் ஒரு படம் மட்டும் எடுத்துவிட்டு கீழே இறங்கினோம்.

Forum Vijaya Mall,Chennai – FoodCourt
கீழ் தளத்தில், பிளாஸ்டிக் பால் உறைகளுக்கு எதிராக ஒரு கலைப்படைப்பை வைத்திருந்தார்கள். பெரிய கண்ணாடி பாட்டில் போல ஒன்று, அதன் மேலே பலநூறு பிளாஸ்டிக் பால் உறைகள். அழகாக இருந்தது, அதையும் ஒரு படம் எடுத்துவிட்டி நின்றுக் கொண்டிருந்தோம்.

Anti-Plastic Milk Packets – An Art campaign
செல்பேசி சிணுங்கியது, எடுத்துப் பார்த்தால், மனைவியின் குரல், மத்திய உணவு தயார். மந்திர வார்த்தையை கேட்டுவிட்டதால், வீட்டிற்கு கிளம்பினோம்.