Movie Review,  தமிழ்

Achchamundu Achchamundu (2009)

என் உறவுக்காரப் பெண் லண்டனிலிருந்து விடுமுறைக்காக வந்து உள்ளாள். எங்களை (நான், என் அக்காக்கள், என் மருமான், என் மருமாள்) சினிமாவிற்கு அழைத்துச் செல்வேன் எனத் துடித்ததால் இந்தப் படத்திற்கு (அச்சமுண்டு அச்சமுண்டு) போனோம், என் மனைவி தப்பித்துவிட்டாள். ஒரு பெற்றோராக அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப் படமாக்கியதற்கு அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதனைப் பாராட்ட வேண்டும். ஆனால் குடும்பமாக குதுகலமாகப் பார்க்கும் படமில்லை, சிறிது வெறுப்படைவதைத் தவிர்க்க முடியவில்லை – இன்னும் கொஞ்சம் நன்றாக கதையைச் சொல்லியிருக்கலாம்.

அப்படி என்ன கதை?. பிரசன்னாவும் (Prasanna), சினேகாவும் (Sneha) அமெ‌ரிக்காவில் தங்களது எட்டு வயது மகளுடன் தனியாக வசிக்கிறார்கள். அந்தக் குழந்தையைப் பாலியல் தாக்குதல் செய்ய ஒரு கொடியவன் முயற்ச்சிப்பது தான் கதை. அமெ‌ரிக்காவில் வாழும் நம் தமிழர்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களது குறுகிய வட்டம் இவற்றை மிக அழகாக செய்தியுள்ளார்கள் பிரசன்னாவும், சினேகாவும் – வாழ்த்துக்கள்; இவை மேலும் இருக்குமா என நம்மை எதிர்பார்க்க வைக்கிறது இயக்குனரின் வெற்றி. பெயின்டராக வரும் வில்லன், வெளிநாட்டு நடிகர் ஜான் ஷா அருமையாக செய்துள்ளார்.