Taha Muhammad Ali Revenge poem

இன்று தமிழ் இந்து திசையில் உருக்கமான ஒரு கவிதையைப் படித்தேன். பாலஸ்தீனக் கவிதை: பழிக்குப் பழி, எழுதியது தாஹா முகம்மது அலி.

சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு…

என் அப்பாவைக் கொன்று

எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி

குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய

அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று

சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு.

அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில்

நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்…

இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன்.

ஆனால்,

துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது

அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ,

குறித்த நேரத்தில் வராமல்

கால்மணி நேரம் தாமதித்தாலும்,

தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும்

தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ

எனக்குப் புலப்பட்டால்

நான் நிச்சயம் அவனைக் கொல்ல மாட்டேன்,

என்னால் முடிந்தால்கூட.

அதேபோல்… அவனுக்குத் தம்பிகளும் தங்கைகளும் இருப்பார்கள் என்பதையோ

அவன்மேல் மிகுந்த அன்பைக் கொண்டிருக்கும் அவர்கள்

அவனுக்காக ஏங்குவார்கள் என்பதோ

எனக்குத் தெரிய வந்தாலும்

அவனை நான் கொல்ல மாட்டேன்.

அவன் வீடு திரும்பும்போது அவனை வரவேற்க மனைவியொருத்தி இருந்தாலோ

அவனது பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத,

அவன் அளிக்கும் பரிசுகளால் குதூகலமடையும் குழந்தைகள் இருந்தாலோ

நான் அவனைக் கொல்ல மாட்டேன்.

அல்லது

அவனுக்கு நண்பர்களோ சகாக்களோ

தெரிந்த அண்டை வீட்டுக்காரர்களோ

சிறையில் மருத்துவமனையில் பரிச்சயமான கூட்டாளிகளோ

பள்ளித் தோழர்களோ இருந்தால்…

அவனைப் பற்றி விசாரிக்கக் கூடியவர்களோ,

அவனுக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பக் கூடியவர்களோ

இருப்பார்கள் என்றால்

நான் அவனைக் கொல்ல மாட்டேன்.

ஆனால்,

அவனுக்கு யாருமே இல்லை என்றாலோ

-அதாவது மரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கிளையைப் போல

அவன் இருப்பான் என்றாலோ-

அம்மா, அப்பா இல்லாமல்,

தம்பி, தங்கைகள் இல்லாமல்

மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் அவன் இருந்தாலோ

உற்றார் உறவினரோ அண்டை அயலாரோ

நண்பர்களோ சகாக்களோ கூட்டாளிகளோ

இல்லாதவன் என்றாலோ

ஏற்கெனவே தனிமையில் வாடும் அவனுக்கு

மேலும் வேதனையை ஏற்படுத்த மாட்டேன்.

மரணமெனும் அவஸ்தையை,

இறந்துபோவதன் துக்கத்தைத் தர மாட்டேன்,

அதற்குப் பதிலாக,

தெருவில் அவனைக் கடந்துசெல்லும்போது

அவனைப் பொருட்படுத்தாமல் செல்வதையே விரும்புவேன்,

அவனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும்கூட

ஒரு வகையில் வஞ்சம் தீர்ப்பதுதான்

என்று எனக்குள் திருப்திப்பட்டுக்கொள்வேன் நான்.

(நாசரேத், ஏப்ரல் 15, 2006) –தாஹா முகம்மது அலி (1931-2011), பாலஸ்தீனக் கவிஞர்,

ஆங்கிலத்தில் (English version): பீட்டர் கோல்

தமிழில்: ஆசை, நன்றி: தமிழ் தி இந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.