கார்ட்டூனிஸ்ட் மதன் என்றாலே விகடன் பத்திரிகையில் பல வருடங்கள் வந்த அவரின் அரசியல் நையாண்டி படங்கள் தான் நினைவில் வரும். அவருக்கு வேறுப் பல பரிமானங்களும் உண்டு. 90களில் அவரின் “வந்தார்கள், வென்றார்கள்” தொடரை வாரம் தவறாமல் படிப்பேன். அதிலிருந்து தான் வரலாறு என்றால் அசோகர் மரம் நட்டார், முகமது கஜினி பதினொரு முறை இந்திய மன்னர்களின் மீதுப் படையெடுத்தான் என்று பாடப்புத்தகங்களில் நாம் படிப்பதுப் போல உயிரில்லா நிச்சயம் என்று தான் நினைத்திருந்தேன். வரலாறு என்பது ஒரு தொடர்ச்சி, நதி போல ஓடிக்கொண்டேயிருக்கும், ஆட்சியில் இருப்பவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி அவர்களால் மாற்றி எழுதப்படும் என்று தெரிந்துக் கொண்டேன்.

இந்த ஆண்டு அவரின் புதிய புத்தகமான “நான் ஒரு ரசிகன்” வெளிவந்துள்ளது. இது லேசான ஒரு படைப்பு – உள்ளேயுள்ள சமாச்சாரத்தில்லை எழுத்து நடையில். வாசிக்கும் போது மதனின் வலைப்பதிவுகளைப் படிப்பது போல ஒரு உணர்வை வரவழைக்கிறது.
தங்கதாமரை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை நான் அமேசானில் வாங்கினேன், விலை: ரூ.130, பக்கங்கள்: 216.

முதல் அத்தியாயத்தில் அலெக்ஸாண்டருக்கும் போரஸ் (என்னும் புருஷோத்தமன்) மன்னனுக்கும் நடந்த யுத்ததை சொல்லவேண்டி மதன் எங்கே ஆரம்பிக்கிறார் தெரியுமா?. தன்னுடைய கல்லூரி காலத்தில் அவரிருந்த திருவல்லிக்கேணியில். அங்கே அவரின் “ஜமா” நண்பரான வெங்கோஜிராவ் எடுத்த எடுப்பில் பாய்ந்து குத்தி வீழ்த்தும் துணிச்சல்காரன் என்றும், தானோ எதிரிகள் வந்தால் “இன்ன இன்ன” என்று 150 முறை மாறி மாறி “இன்ன” மட்டுமே சொல்லும் மைனஸ் 3.5 பவர் கண்ணாடிப் பையன் என்று சொல்லி நம்மை சிரிக்க வைத்துவிட்டு அலெக்ஸாண்டர் அவரின் நண்பனின் உதட்டில் முத்தமிட்டவர் என்று போகிறார். மதன் தன் பதினாலு வயசில் அரும்பு மீசை மீது பென்சிலால் நன்றாக வரைந்து கொண்டி தான் போய் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ அடல்ட்ஸ் ஒன்லி படத்தை பார்த்ததைச் சொல்லிவிட்டு, 1550 ஆண்டுகளில் பிரான்ஸ் மன்னர், ‘சாமான்யர்கள் தாடி வைத்துக் கொண்டால் மரண தண்டனை’ என்று அறிவித்தவர் என்கிறார். தேனுக்கு பின் மருந்து கொடுக்கும் இதே பாணியை தான் நூல் முழுவதும் தொடர்கிறார் மதன். சில அத்தியாயங்களில் இந்த நடை சற்றே சலிக்கவும் செய்கிறது.

‘பெண் என்பவள் முழுமையடையாத ஆண்’ என்று சொன்னவர் தான் கிரேக்கத்தின் மேதையான ‘அரிஸ்டாடில்’ – சரித்திர ஞானமில்லாத என் போன்றவர்களை அதிரவும் வைக்கிறார் மதன். ட்ருபடூர்கள் என்றால் ஏதோ டுபாகூர் என்று தான் எனக்கு தெரியும், உண்மையில் Troubadour என்பவர்கள் ஃபிரெஞ்சு நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த தெய்வீக காதலர்கள் பாடகர்கள், அவர்கள் போற்றிப் போற்றி பாடியது/காதலித்தது திருமணமாகி கணவர்கள் அன்பு செலுத்தாத மனைவிகளை தான் என்றும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் ஆசிரியர். ‘அந்தாக்‌ஷரி’ பிரியர்களுக்கு உதவும் ஒரு செய்தியும் உண்டு “அங்கிளுக்குப் பாடிக்காண்பி” அத்தியாயத்தில் – அது தமிழில் யாரும் இதுவரை ‘ழ’ அல்லது ‘ழி’ தொடங்கும் மாதிரி யாரும் பாட்டெழுதவில்லை என்பது.

சிரிக்கவும், சற்றே யோசிக்கவும் செய்யும் நூல் “நான் ஒரு ரசிகன்”.

Categorized in:

Tagged in:

, ,