எனக்குத் தெரிந்த வங்கி கிளார்க் ஒருவர் வேலூர் அருகே ஒரு சிற்றூரிலுள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறாள். தற்பொழுது நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டுகள் தட்டுபாட்டால் வங்கியில், பணியாளர்கள் பெரும்பாலோர் காசாளர் பணி செய்ய வேண்டியுள்ளது, அவ்வளவு கூட்டம், வாரத்திற்க்கே கோடியை தாண்டாத கிளையில், ஓர் நாளிலேயே கோடிக்கு மேல் செல்லாப்பணம் வருகிறதாம், அவ்வளவு வேலை.  அப்படி காசாளர் பணியில் அவர் இருந்தப்போது நடந்த நகைச்சுவை உண்மை சம்பவம் கீழே.

பையனின் கல்யாணத்தை அடுத்த வாரம் வைத்திருக்கும் “ராமு” (பெயர்கள் கற்பனை) காலை ஒன்பது மணிக்கே, வங்கி திறக்க ஒரு மணி நேரம் முன்பே வந்துவிட்டார். வங்கி திறந்தவுடன் முதல் ஆளாக “செல்வி” அமர்ந்திருந்த வரிசையில் வந்தார்.

ராமு: “என் பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம், ரூபாய் இரண்டரை லட்சம் பணமாக எடுக்கணும். இந்தாங்க மேடம் அதுக்கான பாரம், நேற்று மேனேஜர் “ஜான்” சார் கொடுத்தார், எல்லாத்தையும் எழுதி எடுத்தாண்டுட்டேன்.”

செல்வி: “வாழ்த்துக்கள் சார், கல்யாணப் பத்திரிகை இருக்கா?”.

ராமு: “இருக்கு மேடம், இந்தாங்க”.

செல்வி: “சார் இருங்க, பாரம், பத்திரிகை எல்லாத்தையும் செக்‌ஷன் ஆபிஸர் சரிப் பார்க்கனும், அவரும் கேஷ் கௌண்டர் வேலையா இருக்கார், கொஞ்ச நேரம் உக்காருங்க, நானே குரல் கொடுக்கறேன்”.

ராமு: “சரிமா, கொஞ்சம் சீக்கிரம் பாருங்கம்மா, நேத்தே இரண்டுவாட்டி வந்து போயிட்டேன்”

ராமு: (மனதிற்குள்) “சோளிகங்கர் நரசிம்மர் சாமி, நீ தாம்பா இந்த வேலையை, என் புள்ள கல்யாணத்தையும் நல்லபடி முடிச்சுக் கொடுக்கணும். கல்யாணம் முடிஞ்ச கையோடு பொண்ணு பையனோடு மலையெறி உன்ன கும்பிடக்கூட்டியாரேன்”.

ஒரு அரை மணி நேரம் கழித்து.

செல்வி: “சார், ராமு சார். இங்க வாங்க. அம்மா, ஒரு நிமிசம் மா, அவர் முன்னேயே பாரத்தைக் கொடுத்துட்டார்; அவர முடிச்சுட்டு உங்ககிட்ட வரம்மா. பயப்படாதிங்க இன்னிக்கு இரண்டாயிரம் நோட்டு தான், மதியம் வர கொடுக்க இருக்கு. நூறு ரூபாயே கிடையாது.”

செல்வி: “சார், நீங்க கொடுத்த பாரத்தில் பொண்ணோட அப்பா கையெத்தில்லயே, அத வாங்கிட்டு அவரோட ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஒன்ணையும் எடுத்துட்டு வாங்க. மதியம் வரை இந்த கௌண்டர்ல தான், நான் இருப்பேன்.”

ஒரு மணி நேரம் கழித்து.

ராமு: “மேடம், இந்தாங்க. எல்லாம் சரியா இருக்கா, பார்த்து கொடுத்தனுப்புங்க; கல்யாண வேல நிறையா இருக்கு. இன்னும் ஐயருக்கு கூட அட்வான்ஸ் கொடுக்கல, கையில காசு இருந்தா தானே!”

செல்வி: “இருங்க, உங்க கணக்கில் பணம் இருக்கா பார்க்கணுமில்ல”

ராமு: “என்னம்மா, அதெல்லாம் இல்லாமவா நா இரண்டு நாளா இங்க அலஞ்சிட்டு இருக்கேன், சரி சரி பாருங்க, போன மாசம் பயிர் வித்த மூணு லட்சத்தையும் சேர்த்து, மொத்தம் ஆறு லட்சம் இரண்டாயிரம் கிட்ட இருக்கும். எங்கிட்ட போன்ல வந்த மெசேஜ் வேணா காட்டட்டுமா”

செல்வி: “அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் இருங்க”

ராமு: (முணு முணுக்கிறார்) “கவர்மெண்டு கொடுக்க சொன்னாலும் இவங்க மாட்டாங்க போல

செல்வி: (பாரம் பக்கங்களை வேகமா திருப்பி கொண்டே) “என்ன பண்ண, அவசரமா வேல பண்ணா எங்காவுது கோட்டைவிட்டுரோம். ஆர்.பி.ஐ. ஆடிட்னு வந்து எங்க உசுர எடுக்கிறான். நேத்து இப்படி தான் வந்தவன் 4 பேர் கணக்கு சந்தேகமா இருக்கேன்கரான், நான் என்ன பண்ண”.

ராமு: “உம்ம்ம்”

அப்பொது ராமுக்கு நாலு பேர் தள்ளி இருக்கும் ஒரு ஐம்பது வயது பேண்ட் ஷர்ட் “நாயகன்” “என்னம்மா மேடம், கௌண்டர்ல இவருக்கு மட்டும் இவ்வள நேர(ம்) எடுத்தா எனக்கு எப்போ பணம்கிடைக்க?. நேரம் அவுதுல்ல!”

செல்வி: (உரக்க) “இருங்க சார், அவரு பையனுக்கு கல்யாணம் இருக்கு, கவர்மெண்டு ஆடர்படி அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கொடுக்கனும், அதுக்கு கொஞ்சம் நேரமாகும், இருங்க!. சீக்கிரம் முடிச்சுருவேன், ஏற்கனவே அவரு ரண்டு நாளா வராரு”

“நாயகன்”: “இதென்ன புதுகதை. என்புள்ளைக்குக் கூட போன வாரம் சனிக்கிழம கல்யாணம் நடந்தது. அந்த வாரம் புதனன்னிக்கு இங்க இருக்கே, இந்த அம்மா தான், இப்போ நீங்க இருக்கிற சீட்ல இருந்தாங்க. கல்யாணத்திற்கு இரண்டரை லட்சம்னு சொல்லவே இல்லையே.”

செல்வி: (உரக்க) “ஐயா, அதெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் வீட்டில் கல்யாணம் இருந்தா, இரண்டரை லட்சம் கொடுப்போம்.”

“நாயகன்”: (செல்வியின் கௌண்டர் அருகிலேயே வந்து மிரட்டலாக) “அப்போ எனக்கு முதல்ல கொடுத்துட்டு இந்தாளுக்கு குடுங்க”

ராமு: “வரிசைல வந்து கேளு. கொடுக்க போறாங்க”

“நாயகன்”: “அதேல்லாம் தெரியாது, எனக்கு கொடுக்கிறேன்னு சொல்லட்டும், நா பின்ன போறேன்”

ராமு: “அறிவில்ல. நா முன்ன இருக்கேன், அந்தப் பொண்ண வேல செய்யவிடாம நீ கத்திக்கிட்டே இருக்க”

அதற்குள்ள விசயம் புரியாமல், நடுவில் புகும் ஆசாமிங்க சில: “என்னம்மா, அந்தாளுக்கும் உண்டுன்னு தான் சொல்லேம்மா”

செல்வி: “உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க”

“நாயகன்”: “அதேல்லாம் தெரியாது, இந்தாங்க செக்கு புக், பார்த்துக்குங்க”

செல்வி: (கம்புயூட்டரை தட்டி கொண்டே) “உங்க கணக்கில நாற்பதாயிரம் தான் இருக்கு. அது வரைக்கும் தான் கொடுக்க முடியும். அதுவும் உங்க முன்னாடி இருக்கிறங்கவங்களை முடிச்சுட்டு தான். பாரம் வேர நீங்க பூர்த்தி பண்ணி தரணும்”

“நாயகன்”: (இப்போது கத்திக் கொண்டே) “இது என்ன எமாத்து வேல. இவனுக்கு மட்டும் கல்யாணத்திற்கு இரண்டரை லட்சம்னு, எனக்கு மட்டும் நாற்பதாயிரம் தானாமே. இவன் உங்களுக்கு எவ்வளவு காசு கொடுத்தான். நான் சும்மா விட மாட்டேன்”

அப்போது செல்விக்கு டீ வருகிறது.

“நாயகன்”: “ஏம்மா, இந்த டீ கூட கமிசன் அடுச்ச காசுல வாங்கியது தானா”?

தன் கையவிட்டு எட்டு ரூபாய் கொடுத்து தனக்கு வாங்கிவர சொன்ன டீயில இவருக்கு என்ன பிரச்சனை, செல்விக்கு ஒண்ணுமே புரியல, முழிக்கிறாள்.

ராமு: “யோவ் உன் அக்கவுண்டில் இல்லேன்ராங்கில்ல. கத்திக்கிட்டே இருக்க. சும்மா இரு”

“நாயகன்”: (முன்பு சுட்டிகாட்டிய இன்னொரு வங்கி அலுவலரை பார்த்து) “இந்தாம்மா, நான் அன்னிக்கு வந்த போதே சொல்லாம, எனக்கு தர வேண்டிய மான்யத்தை நீ தான் அடுச்சிட்டியா?. சும்மா விட மாட்டேன் தெரியுமா”

வங்கியே இப்போது சிரிக்க ஆரம்பிக்கிறது.

அப்போது மேனேஜர் அங்கே வருகிறார்.

மேனேஜர்: “என்ன சார் இங்க பிரச்சனை. வேல செய்யுர எடத்துல கத்தாதீங்க”

“நாயகன்”: “வாய்யா, நீ தான் இதற்கு தலைவனா. கவர்மெண்டு கொடுக்கிற இரண்டரை லட்சம்  மான்யத்தை பத்தி சொல்லாம, போஸ்டர் ஒட்டாமா அமுக்கி உங்களுக்குள்ளேயே பிறிச்சுக் கொடுக்கிற ஆள் நீ தானா”

மேனேஜர்: (கோவமாக) “ஆமாம். நான் தான். நீ போய் உன் பையனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வையு. அந்த பத்திரிகையும், பாரமும் கொண்டுவா, உனக்கும் இரண்டரை லட்சம் தரோம்.”

“நாயகன்”: “என்ன நக்கலா, என் குடும்பத்தை தப்பாவா பேசர நீ, உங்களல எல்லோரும் பத்தி நான் புகார் கொடுக்கிறேன். அது வரைக்கும் நீங்க இந்தாளுக்கும் யாருக்கும் பணம் கொடுக்கவிட மாட்டேன்”

ராமு: (மனதிற்குள்) “இதென்னடா புது கத. கையில பணத்தை வாங்க போற நேரத்தில இந்த கிறுக்கு இப்படி குழப்புதே.”

செல்வி: “சார், இந்தாங்க பாரம். இதில்ல எங்களப் பத்தி எழுதி நீங்க எங்க சென்னை எட் ஆபஸுக்கு அனுப்புங்க, அவங்க பார்த்து உங்களுக்கு செய்வாங்க”

வங்கியில் இருக்கும் பலர், வாசல் காவலர் உட்பட இப்போது, “நாயகனை” பார்த்து “அதான், பாரம் கொடுத்துட்டாங்க இல்ல, நீ வாங்கிட்டு கிளம்பு”

கத்தி கொண்டே செல்கிறார் “நாயகன்”. வங்கியே ஒரு நிமிடம் சிரித்துவிட்டு பின்பு அமைதியாகிறது.

ராமு: “அப்பாடா”

செல்வி: “இந்தாங்க உங்க இரண்டரை லட்சம். உங்க பையனுக்கு வாழ்த்துக்கள். அடுத்தவர் வாங்க சார்”.

 

 

 

Categorized in:

Tagged in:

,