மாதொருபாகன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் இந்த நாவலின் பெயரைக் கேட்டாலே அதிருகிறது இல்ல!.

தற்பொழுது எழுந்துள்ள சர்ச்சையால் ஒரு திறமையான எழுத்தாளரை தமிழ் உலகம் இழந்திருக்கிறது, இது நம் நிகழ்கால சமுதாயத்தின் துரதிர்ஷ்டம். இந்த சர்ச்சை எதனால் என்று விலாவாரியாக பலர் எழுத்தியுள்ளார்கள், நாவலில் ஆசிரியர் சொல்லியுள்ள பழக்க முறையைப் பற்றி எனக்கு எந்தவித சரித்திர, கலாச்சார, மரபு வகையான ஆழ்ந்த அறிவோ, திறமையோ இல்லாததால் அதைப் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. புத்தகத்தை முழுவதும் வாசித்த வாசகன், தமிழ் நாட்டின் (இந்தியா) குடிமகன் என்ற முறையில் மட்டுமே இந்த பதிவு.

மாதொருபாகன், இந்த வித்தியாசமான தலைப்பு  சிவப்பெருமானின் பலப் பெயர்களில் ஒரு பெயர், இதன் அர்த்தம் சிவனின் உடலில் இருப்பது ஆண் பாதி பெண் பாதி என்று காட்டிய அர்த்தநாரீசுவரைக் குறிப்பது.  மூலவர் மாதொருபாகனாக காட்சி தருவது திருச்செங்கோட்டில் மட்டுமே என்று முன்னுரையில் ஆசிரியர் சொல்லும் போதே இது அந்த ஊரைப் பற்றிய கதை என்று நமக்கு தெரிந்துவிடுகிறது. திருச்செந்தூர் எங்கே என்று எனக்கு தெரியம், (சென்னையில் பிறந்து வளர்ந்ததால்) திருச்செங்கோடு எங்கே என்று நினைபடுத்த இணையத்திற்கு செல்ல வேண்டி இருந்தது எனக்கு.

கதையில் வரும் ஒவ்வொருவரும் பேசும் வசனங்களிலும் மண்வாசனை தூக்கல்.

முதல் பத்தியிலேயே நம்மை ரம்மியமான கிராமத்து தோட்டத்திற்கு அழைத்து சென்றுவிடுகிறார் பெருமாள் முருகன். நாமோ புத்தகத்தை மறந்து பூவரச மரத்திற்கு அடியில், அதன் சிவந்த குவிந்த பூக்களின் மேல் போட்டுள்ள கட்டிலின் மேல் அமர்ந்து நாசிக்கருகில் வந்துப் போகும் மணத்தை ரசித்தப்படியே இருக்கிறோம். அதிலிருந்து வெளிவந்தவுடன் அடுத்த சில அத்தியங்களில், விவசாயி காளி அவன் மனைவி பொன்னாள் மேல் வைத்துள்ள காதலை நாம் புரிந்துக் கொள்கிறோம், அவர்களுக்குள் உள்ள அன்பைப் பார்த்து கொஞ்சம் போறாமையாகக் கூட எனக்கு இருந்தது. அதற்கு பிறகு அரம்பிக்கிறது சோகம். திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும் அவர்களுக்கு குழந்தையில்லை என்பதால் ஊரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிறார்கள். காளியின் நண்பர்களே அவனை “வறடன்” என பட்டப்பெயரிட்டு தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். பொன்னாளோ “வெச்ச செடியும் பூக்குது, வெதச்ச வெதையும் மொளைக்குது, வெறும் நெலமாப் போனது நாந்தானா?” என்று புலம்புகிறாள்.

பாவாத்தா கோயில் தாண்டி மலை மேலேறிப் போனால் உச்சியில் பாண்டீசுவரர் கோயில், அதன் பக்கத்தில் ஆளுயர ஒற்றைக்கல் நிற்கும், அது தான் வறடிகல், அதை சுற்றியுள்ள அரைவட்டத் தடத்தைச் சுற்றி வருவது தான் சவால், கொஞ்சம் எட்டிப் பார்த்தால் கால் நடுக்கமெடுத்து கடுஞ்சரிவில் விழுந்து தொலைய வேண்டியது தான், என படிக்கும் போது ஒரு நிமிடம் எனக்கு மலை மீதுள்ளதுப்போல பயமாக இருந்தது.  பிள்ளை வேண்டி காளியும் பொன்னாளும் செய்யும் பரிகாரங்களை படிக்கும் போது நமக்கு அழுகையாக வருகிறது. அதன் உச்சக்கட்டம் தான், ‘பதினாலாந் திருநா அன்னைக்குத் திரசங்கோட்டுல் காலடி எடுத்து வைக்கற ஆம்பளைங்க எல்லாரும் சாமி தான். கொடுக்கறது சாமி தான‘ என வரும் கதையில் முடிவு.

கடைசிப் வரிகளைப் படித்து முடித்தவுடன், நம் மனக்கண்ணில் தெரிகின்ற, வானில் விரிந்து பரவியிருந்த பூவரசங் கிளைகள் மறைய சற்று நேரம் எடுப்பது நிச்சயம்!

Support-Freedom-of-speech-Perumal-Murugan-

5 ஜூலை 2016: இன்று மதிப்பிற்குரிய சென்னை உச்ச நீதிமன்றம் ஒரு விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது இந்த படைப்பைப் பற்றி, அனைவரும் படிக்க வேண்டிய தீர்ப்பு.  ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

Categorized in:

Tagged in:

, ,