தமிழில் வருங்கால விஞ்ஞான (Sci-Fi) கதைகள் என்றால் நம் நினைவில் முதலில் வருவது மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான்.  அவரின் ‘மீண்டும் ஜீனோ’ புத்தகதை ரசித்தவர்களில் நானும் ஒருவன், ரசித்தேன் என்று சொல்வதைவிட அதன் தாக்கத்தில் பல நாட்கள் மூழ்கி இருந்தேன் என்பது தான் நீஜம்.  திரு.சுஜாதா அவர்களை ஓரிரண்டு முறை பார்த்திருக்கிறேன். அது 90களின் இறுதியில், அப்போது அவர் Dishnet நிறுவனத்தின் “அம்பலம்” தமிழ் வலையிதழ் முயற்ச்சிகளில் இருந்தார், இணைய தொழில்நுட்பம் பற்றி பேச, முரசு அஞ்சல் (மலேசியா) முத்து நெடுமாறன் அழைத்துக் கொண்டு சென்றார். தொழில்நுட்பங்களைப் பற்றி இளைஞர்களை விட அவரின் ஆற்வம் அதிகம், அதோடு தமிழ் வலமையும் சேர்ந்து இருந்ததால் அவரோடு பேசுவது என்றால் தேன் சுவைப்பது போல ஒரு அனுபவம், அதனால் தான் எனக்கு அது ஓரிரு முறை மட்டுமே கிடைத்தது!

Kadhavul-Vandhuirunthar-3

இந்த வாரம் அவரின் கதையான “கடவுள் வந்திருந்தார்” நாடகம் நடக்கிறது என்று படித்தயுடன் டிக்கெட் வாங்கி, இன்று பார்த்தேன். அருமை. கதை – வருங்கால மனிதன் ஒருவன் தற்காலத்திற்கு வந்தால் என்னவாகும், அவனை தற்காலத்தில் ஒருவர் மட்டுமே பார்க்க முடியும், அதுவும் அந்த பார்க்க முடியும் தற்கால நபர் சமீபத்தில் தான் ஒய்வுப் பெற்றவர் என்றால் சமூகம் அவரை எப்படி வினோதமாக பார்க்கும் என்பதை நகைச்சுவையோடு சொல்கிறார் சுஜாதா. ஆங்கிலத்தில் இது போன்ற கதைகள் பல உள்ளன என்றாலும், அவற்றை உள்வாங்கி தமிழ் சூழலுக்கு அழகாக சுஜாதா கொடுத்துள்ளார்.

Kadhavul-Vandhuirunthar-2

இதில் கடவுள் எங்கும் இல்லை, பின் எப்படி இந்த தலைப்பு?

வருங்கால மனிதனைப் பார்க்கிறேன் என்று சொன்னதால் அவரை பைத்தியம் என்று எண்ணும் சமூகம், அவரே நான் கடவுளைப் பார்க்கிறேன் என்று பொய் சொல்லி சில வித்தைகளைச் செய்யும் போது, அவரை கடவுளின் அவதாரமாக கொண்டாடுகிறது. அதனால் தான் தலைப்பு –  கடவுள் வந்திருந்தார். இது தான் சுஜாதாவின் மந்திர டச்சு (Magic Touch).

தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடகரான “பூர்ணம் விஸ்வநாதன்” அவர்களின் வழி வந்த குருகுலம் என்ற நாடக குழு இன்று இந்த நாடகத்தை நடித்தனர். பாங்காக செய்தார்கள். குருகுலம் எம்.பி.மூர்த்தி அவர்கள் (பூர்ணம் அவர்கள் முன் செய்த) முக்கிய பாத்திரத்தை இயல்பாக, ரசிக்கும் படி செய்தார்.

Kadhavul-Vandhuirunthar-1

Tagged in:

,